தவறுதான் - திமுக தொண்டரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி


திமுக தலைவர் முக ஸ்டாலினின் மகன் உதயநிதி. சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக உள்ளார். சமீபகாலமாக அரசியல் மேடைகளிலும் உதயநிதியை பார்க்க முடிகிறது. திமுக சார்ந்த பல கூட்டங்களில் வரவேற்பு பேனர்களில் உதயநிதி படமும் இடம்பெற்று வந்தது. உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் கூட உள்ளது. 

உதயநிதியின் வளர்ச்சிக்கு கட்சியில் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அது குறித்து எந்தவிதமான பதிலையும் கூறவில்லை. திமுகவில் அடிப்படை உறுப்பினராக உதயநிதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதனால் அரசியலில் அவர் தீவிரம் காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது

                                       

உதயநிதியின் இந்த திடீர் அரசியல் ஆர்வம் ஒருபக்கம் இருக்க, தஞ்சை தெற்கு மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கான பேனரில் ஸ்டாலின் புகைப்படத்தோடு உதயநிதியும் படமும் சேர்த்து அச்சிடப்பட்டது. அச்சிடப்பட்ட அந்த பேனர் நிகழ்ச்சி மேடையில் இடம் பெற்றிருந்தது. இது சரியில்லை என்று திமுக தொண்டர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்

                           

அதிமுக தொண்டர்களும் கூட வாரிசு அரசியலை நோக்கிய நகர்வு என கேலி செய்தனர். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக தொண்டர் ஒருவர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து “Mr @Udhaystalin  ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா? முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” என கேள்வி எழுப்பியிருந்தார். திமுக தொண்டரின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் “ தவறு. மீண்டும் நடக்காது” என்று பதிலளித்துள்ளார்.  

POST COMMENTS VIEW COMMENTS