இரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் ?


கர்நாடகாவில் சில அரசு துறைகளின் தலைமையகத்தை வடக்கு கர்நாடகா பகுதிகளுக்கு மாற்ற அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. பெங்களூரு போன்று மற்றொரு தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் , சில துறைகளின் அலுவலகங்களை மாற்றுவதன் மூலம் அந்த கோரிக்கையின் சில அம்சங்களை பூர்த்தி செய்ய முடியும் என அம்மாநில அரசு நம்புகிறது. குறிப்பாக வடக்கு கர்நாடகாவில் இருந்து செயல்பட ஏதுவான 12 துறைகளில் முக்கிய அலுவலகங்கள் மாற்றப்படுகிறது. இதற்கென பிரத்யேக குழு அமைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 

கர்நாடகா இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் , தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் அல்லது பருவகால தலைநகர் போன்ற அம்சங்கள் சாத்தியமா ? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ஏனெனில் சென்னையில் இருந்து தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. அவ்வப்போது சிலர், திருச்சியை இரண்டாம் தலைநகராக மாற்றலாம் என்ற கோஷத்தை வைக்காமல் இல்லை. அதே போல் மதுரையிலும் இரண்டாம் தலைநகரை அமைக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. இதனை வலுவாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்கள். தென்மாநில மக்கள் சென்னை வருவதை பெருமளவு தடுத்த பங்கு உயர்நீதிமன்றத்துக்கு உண்டு. 

தலைநகரில் ஏன் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது, ஏன் அது வலுப்பெற வேண்டும் என்பதற்கான காரணங்களை பலரும் முன்வைக்கின்றனர். குறிப்பாக எந்த ஒரு பணிக்காகவும் தமிழகத்தின் கடைக் கோடியில் இருப்பவர்கள் சென்னை நோக்கி வர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் நெரிசல் மிக்க நகரமாக சென்னை மாறிவிட்டது. வளர்ச்சி என்பதும் கூட சென்னையை சுற்றியே இருப்பதாக மாறிவிட்டது. இது பரவலாக்கப்பட வேண்டும் என்றால் தலைநகர் மாற்றம் அவசியம் என்கின்றனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒருமுறை சென்னையிலும் மறுமுறை இரண்டாம் தலைநகரிலும் நடந்தால் மக்களுக்கு அது நன்மை பயக்கும். 

வேலை வாய்ப்பு குறைதலும், தொழில் வளர்ச்சி சுணக்கமும் தலைநகரை பிரித்து மற்றொரு நகரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கொடுக்கிறது. மேலும் அரசுத்துறை சார்ந்து எந்த ஒரு பதிலைப் பெற வேண்டும் என்றாலும், சென்னைக்கு வர வேண்டும். இதனால் குறைந்தது 2 நாட்கள் செலவிட வேண்டிய கட்டாயம் தென் மாவட்ட மக்களுக்கு உள்ளது. தலைமைச் செயலக கிளையை அமைத்தல், முக்கிய துறைகளின் தலைமையகத்தை மாற்றுதல், தொழில்துறை போன்றவற்றை பரவலாக்குதல், தென்மாவட்டங்கள் சார்ந்து வளர்ச்சி திட்டங்களை பெருக்குதல் மூலம் இதனை செய்ய முடியும் என்பது ஆர்வலர்கள் கருத்து. அதே நேரத்தில் இந்த திட்டம் வளர்ச்சிக்கான படியாக மாறும் என்பதும் அனைவரின் எண்ணம். அரசு யோசிக்குமா ? 

POST COMMENTS VIEW COMMENTS