“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்


மறைந்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் பிரணார் முகர்ஜி சென்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் பிரணாப் முகர்ஜியை வரவேற்றனர். இதன் பின் கோபாலபும் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, “கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனால் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். பின்னர் ஸ்டாலின், கனிமொழி உள்பட அவரின் குடும்ப உறுப்பினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். 48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி. சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்துவிட்டோம்” என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS