மறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்:  போலீஸ் தீவிர விசாரணை


கோவையிலுள்ள குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னு செல்வபுரம் பகுதியில், செல்வம்பதி குளத்தில் கை, கால்கள், தலை மற்றும் உடல் என தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மிதந்தது. இதனையடுத்து செல்வபுரம் போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் தற்போது அதே பகுதியில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில், ஆண் சடலம் ஒன்று தென்பட்டது. 

இதனையெடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ் புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.  

மேலும் இந்தப் பகுதியை சுற்றியுள்ள குளங்களில் அடிக்கடி சடலங்கள் மீட்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தான் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்தக் குற்றத்தை செய்தவர்கள் யார்? கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் உள்ள குளத்தில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவர் அடித்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணத்திற்காக இவரை கொலை செய்தனரா என்று போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு பின்னர்தான் தெரிய வரும்.  

அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்படுவதால் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்தக் குளக்கரையின் வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS