சத்துணவு முட்டை கொள்முதலுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்


சத்துணவு முட்டை கொள்முதலுக்கான தமிழக அரசின் டெண்டரை வரும் 20ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிய உணவுத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரி கடந்த மாதம் 20-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. வெளிமாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்தும், மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் நிபந்தனைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கரூர் வாசுகி கோழிப் பண்ணை உள்பட 4 கோழிப்பண்ணைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் அரசின் அறிவிப்பால், தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தது. வெளிமாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடவும், முட்டை டெண்டருக்கு ‌தடைவிதிக்கவும் கோரப்படிருந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசின் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், வரும் 20ஆம் தேதி வரை முட்டை கொள்முதல் டெண்டரை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வரும் 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் விளக்க மனுக்கள் தாக்கல் செய்யுமாறு கூறினார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS