குட்கா விவகாரம் : ஜார்ஜ் வீட்டில் சிபிஐ சோதனை


குட்கா விவகாரம் தொடர்பாக 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, குட்கா ஊழல்
விவகாரம் வெளிவரக்காரணமாக அமைந்தது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்ததால், கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. 3 மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை
ஆய்வு செய்த சிபிஐ, முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியுள்ளது. சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி மாதவராவுக்கு சம்மன் அனுப்பியது. 

அதன்படி சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அலுவகத்தில் ஆஜரான குட்கா நிறுவன உரிமையாளரிடம் 10 மணி நேரம் விசாரணை
நடத்தப்பட்டது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகும் குட்கா விற்பனை நடந்தது எப்படி என்றும், எங்கிருந்து‌ குட்கா பொருட்கள்
கொண்டு வரப்பட்டன என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குட்கா விற்பனைக்கு உடந்தையாக
செயல்பட்ட அதிகாரிகள் குறித்தும் விசாரணையின்போது அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரியவந்தது. மாதவராரிடம்
பெற்ற வாக்குமூலத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டது.

இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக இன்று 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விடுகளிலும் சிபிஐ
அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகள்
வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS