மு.க.அழகிரியின் அமைதிப்பேரணி - பலத்த போலீஸ் பாதுகாப்பு


திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 30 நாட்கள் ஆவதையொட்டி மெரினாவில் மு.க.அழகிரி தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைந்த பிறகு அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு முன்பே திமுகவில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தினார். கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என்பக்கம் உள்ளனர் என பகீர் தகவலை தெரிவித்தார். தன்னை திமுகவில் சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ஆனால் இது திமுக கட்சி நிர்வாகிகள் இடையே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை என பலரும் தெரிவித்தனர். 

இதையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று சென்னையில் அமைதிப் பேரணியை மு.க.அழகிரி நடத்துகிறார். இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அழகிரி தெரிவித்திருந்தார். இதற்காக வெளியூர்களில் இருந்து அழகிரியின் தொண்டர்கள் மெரினாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதற்கான பாதுகாப்பு பணியில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் குவிந்து வரும் அழகிரியின் ஆதரவாளர்கள், மெரினாவின் சுற்றுவட்டாரப்பகுதிகள் முழுவதும் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இருந்து புறப்படும் அமைதிப்பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து தனது அரசியல் முடிவை அறிவிக்கப்போவதாக அழகிரி தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS