ஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று தேசிய ஆசிரியர் தினம்
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பன்வாரிலால், மாணவர்கள் அறிவு, ஒழுக்கம், நலனுக்காக தங்களை அர்ப்பணித்து
சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஒருநாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும்
கல்வியை இளம் தலைமுறையினருக்கு கற்பித்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க உதவிடும் ஆசிரியப் பெருமக்களின் சேவை
மென்மேலும் சிறக்க முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்தியுள்ளார். மகத்தான பணி மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர்
ராதாகிருஷ்ணன் விருது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கெளரவிக்கப்படுவதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் போதித்து அவர்களை இந்த சமுதாயத்தை சிறந்த முறையில்
எதிர்கொண்டு வாழச் சொல்லிக் கொடுக்கும் தெய்வீகப் பணி என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மானிட
சமுதாயத்தின் மாண்பு அனைத்திற்கும் தேவையானது ஆசிரியர்கள் நடத்தும் கல்வி புரட்சி என்றும் அவர்களின் நலனுக்காக திமுக
துணை நிற்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் வருங்கால சமூதாயத்தை உருவாக்கம் உன்னத சேவையை ஆற்றிவருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது
வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணி அறியாமை பிணி அகற்றும் மகத்தான பணி என கூறியுள்ள பாஜக தமிழகத்
தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை பெரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது வாழ்த்துகளை
தெரிவித்துக்கொண்டுள்ளார். ஒரு நாட்டின் செல்வங்களாக விளங்கும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதென்பது மிகப்பெரிய
கடமையாகும் எனக்கூறியுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், அக்கடமையினை ஒரு சேவையாக
நினைத்து பணியாற்றம் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS