கூலித் தொழிலாளர்கள் பெயரில் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி


விருதுநகரில் கூலித்தொழிலாளர்களின் பெயரில் வங்கியில் கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகரில் வேல்முருகன் என்பவர் ஓ.எம்.எஸ் என்ற பெயரில் பருப்பு மில் நடத்தி வருகிறார். வேல்முருகனும், அவரது உறவினர்கள் இருவரும் மில்லில் பணியாற்றும் கூலித்தொழிலாளி வெயில்முத்துவுக்கு காப்பீடு போடுவதாகக் கூறி கடந்தாண்டு பல்வேறு படிவங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்டம் தென்கரை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வெயில்முத்துவிற்கு வந்த கடிதத்தில், வங்கியில் வாங்கிய 41 லட்சம் ரூபாய் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வெயில்முத்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். வெயில்முத்து அளித்த புகாரின்பேரில் மில் உரிமையாளர் வேல்முருகன் மற்றும் அவரது உறுவினர்கள் செண்பகன், செல்வி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் செண்பகன் மகள் இந்துமதியையும் தேடி வருகின்றனர். 5 பேர் புகார் அளித்துள்ளதாகவும் அதில் 2 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையில் மில்லில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு காப்பீடு போடுவதாகக் கூறி தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கோடிக் கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கி மேலாளர்களின் உதவியில்லாமல் கடன் மோசடி நடைபெற வாய்ப்பில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS