மு.க.அழகிரிக்கு ஆதரவா ? - அதிரடியாய் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி


திமுகவில் இருந்து வேளச்சேரி கிழக்குப் பகுதி செயலாளர் மு.ரவி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைந்த பிறகு அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு முன்பே திமுகவில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தினார். கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என்பக்கம் உள்ளனர் என பகீர் தகவலை தெரிவித்தார். தன்னை திமுகவில் சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ஆனால் இது திமுக கட்சி நிர்வாகிகள் இடையே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை என பலரும் தெரிவித்தனர். வரும் செப்டம்பர் 5ஆம் சென்னையில் பேரணியை நடத்தவுள்ளதாகவும், அதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பதாகவும் அழகிரி கூறினார். இதற்கிடையே மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளவும் தயார், ஆனால் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அழகிரி கூறிவிட்டார்.

இந்நிலையில் திமுகவின் வேளச்சேரி கிழக்குப் பகுதி செயலாளராக இருந்த ரவி, மு.க.அழகிரிக்கு ஆதரவாக செயல்பட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தாற்காலிகமாக நீக்கியுள்ளதாக, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Read Also -> விமானத்தில் நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்  

POST COMMENTS VIEW COMMENTS