சேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்!


சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெற்றோரை இழந்த 3 வயது குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்தும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் என்னுமிடத்தில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூருவுக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையோரம் நின்றுள்ளது.  சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் லாரி நின்றதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் லாரி நிற்பதைக் கண்ட ஓட்டுநர் அதன் மீது மோதாமல் இருக்க பேருந்தைத் திருப்பியுள்ளார். அப்போது, பேருந்து லாரி மீது மோதியதுடன் மட்டுமல்லாமல் தடுப்பைத்தாண்டி எதிர்ப்புற சாலைக்குச் சென்று அதில் வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது நேருக்குநேர் மோதியது. 

இதில் பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான பேருந்துகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன.


உயிரிழந்தவர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதில், கோட்டயம் மாவட்டத்தின் திருவில்லாவைச் சேர்ந்த பினு ஜோசப் - சிஜி வின்சென்ட் பெங்களூருவில் பணியாற்றி வந்தனர். வார விடுமுறையை கழிப்‌பதற்காக சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது 3 வயது ஆண் குழந்தை காயமின்றி மீட்கப்பட்டது. குழந்தையின் உறவினர்கள் யாரும் இன்னும் வராததால், இரவு முழுவதும் மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பில் இருந்த குழந்தை இன்று காலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

உறவுகளோடு விடுமுறையை கழிக்க மகிழ்ச்சியாக புறப்பட்ட குழந்தை, தன் பெற்றோர் உயிரிழந்ததைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் அவர்களை தேடி கதறி அழும் காட்சி காண்போரை கலங்க வைக்கிறது.

POST COMMENTS VIEW COMMENTS