சேலத்தில் 12 பசுமைவெளி பூங்காக்கள் : திறந்துவைத்தார் முதலமைச்சர்


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட 12 பசுமைவெளி பூங்காக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலம்பட்டி, சூரமங்கலம் ஆகிய 4 மண்டலங்களில் ரூ.5.07 கோடி செலவில் 12 பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி அம்மாபேட்டை அய்யாசாமி தோட்டத்தில் நடந்தது. பூங்காவினை திறந்து வைத்த முதலமைச்சர் நேரடியாக சென்று பூங்காவில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவனுடன் முதலமைச்சர் இறகுப்பந்து விளையாடினார். 

இந்த பூங்காக்களில் உடற்பயிற்சி உபகரணங்கள், சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளன. அதேபோல 8 வடிவிலான நடை மேடை, இறகுபந்து விளையாட்டு தளம், மாதிரி மூலிகை பண்ணை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களை திறந்து வைத்த பிறகு, போஸ் மைதானம் சென்ற முதலமைச்சர், பிளாஸ்டிக் இல்லா சேலத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS