அதிமுகவை உடைக்கவோ, ஆட்சியை கவிழ்க்கவோ முடியாது -முதல்வர்


திமுகவால், அதிமுகவை உடைக்கவும் முடியாது, ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியில் 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் எட்டிக்குட்டைமேட்டில் அடுத்த ஆண்டு முதல் புதிய கல்வியியல் கல்லூரி செயல்படும் என்றார். 

                 

பருவமழை காலத்தில் வீணாக கடலுக்கு செல்லும்‌ தண்ணீரை சேமிக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்றாண்டுகளில் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றார்.

எடப்பாடி கொங்கணாபுரம், மற்றும் மகுடஞ்சாவடி விரிவாக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவால், அதிமுகவை உடைக்கவும் முடியாது, ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது என்றார்.

முன்னதாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS