விசாரணைக்கு சென்ற மாணவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சி வெளியீடு


திருவள்ளூர் அருகே ரயில்வே பாதுகாப்பு படை விசாரணையின் போது உயிரிழந்ததாக கருதப்படும் மாணவன் தப்பி ஓடும் சிசிடிவி காட்சியை ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சின்னகாவனம் கிராமத்தைச் சேர்ந்த மவுலீஸ்வரன் அங்குள்ள அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 24ஆம் தேதி கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக மவுலீஸ்வரனை அழைத்துச் சென்றுள்ளனர். அடுத்த நாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மவுலீஸ்வரன் உடல் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினர் மவுலீஸ்வரனை அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மவுலீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைக்க அவரது உடல் தண்டவாளம் அருகே வீசப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மவுலீஸ்வரன் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்களும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அங்கத் குமார், காவலர் வினய்குமார் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மவுலீஸ்வரன் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனிடையே கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து உயிரிழந்த மாணவன் மவுலீஸ்வரன் தப்பியோடுவது போன்ற சிசிடிவி காட்சிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS