82 வயதுடைய யானை ! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி


முதுமையால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வரும் 82 வயது பெண் யானை சுந்தரிக்கு நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை பன்முக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்தவர் அசன் மைதீன். இவர் கடந்த 15 வருடமாக சுந்தரி என்ற பெண் யானையை பராமரித்து வருகிறார். இந்த யானைக்கு 82 வயது ஆவதால் முதுமை காரணமாக பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது. கண்பார்வை இரண்டையும் இழந்த நிலையில், வாயில் புண்கள், காலில் வெடிப்பு போன்ற காரணங்களால் மிகுந்த அவதியடைந்து வருகிறது.

மேலும் இலை, தழை போன்ற உணவுகளை உண்ண முடியாமல் அவதிப்படுகிறது. சாதம், வாழைப்பழம் போன்ற மிருதுவான உணவு மட்டும் எடுத்துக் கொள்கிறது. இந்த நிலையில் நோய் தாக்கத்தினால் தன் மீது மண் வாரி தூற்றிக்கொள்ளும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நெல்லை சந்திப்பு அருகே ஸ்ரீபுரத்தில் உள்ள கால்நடை பன்முக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் முதுமை காரணமாகவும், காலில் ஏற்பட்டுள்ள புண்கள் காரணமாகவும் படுக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறது.. தொடர்ந்து சிகிச்சையானது அளிக்கப்பட்டாலும் மனிதர்களை முதுமையில் பராமரிப்பது போன்று தான் பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுநீரகம், இரத்தம் போன்றவை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு யானை தீவிரமாக பராமரிக்கப்படுகிறது என வருத்ததுடன் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

POST COMMENTS VIEW COMMENTS