கொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது 


மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் தர மறுத்த லாரி உரிமையாளரை கொலை செய்து விட்டு, 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2000-ஆம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள ஏரியில், லாரி உரிமையாளர் தவர்சிங், லாரி ஒட்டுநர் மங்குபாய், கிளீனர் பிரேம் சந்த் ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது, லாரி ஓட்டுநர் மங்குபாய், தமது மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு லாரி உரிமையாளர் தவர்சிங் மறுக்கவே, அவரை இரும்பு ராடால் தலையில் அடித்து விட்டு, அவர் வைத்திருந்த ₹50000 பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த ஏரிக்கரையிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இருவரும் தப்பிய நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, லாரி உரிமையாரின் எரிந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த லாரி கிளீனர் பிரேம் சந்தை கைது செய்தனர். 

எனினும், முக்கிய குற்றவாளியான மங்குபாய் தலைமறைவானதையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்,  மங்குபாய், மஹாராஷ்டிராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே, அங்கு சென்ற தனிப்படை போலீசார், குடும்பத்துடன் வசித்து வந்ததை கண்டு கைது செய்து தமிழகம் கொண்டு வந்தனர். பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் மங்குபாயை ஆஜர்படுத்திய போலீசார், பின் புழல் சிறையில் அடைந்தனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு, கொலை குற்றவாளியை கைது செய்த போலீசாரை, பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
 

POST COMMENTS VIEW COMMENTS