நாதெள்ளாவின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்


வங்கிக் கடன் பெற்று முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாதெள்ளா குழுமத்தின் ரூ.328 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் நாதெள்ளா சம்பத்து செட்டி குழுமத்தின் 37 அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரலில் அந்நிறுவனம் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதன்பேரில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2009ஆம் ஆண்டு முதல் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிக் கூட்டமைப்பிடம் பல கோடி ரூபாய்க்கான ரொக்க கடன் வசதியை நாதெள்ளா நிறுவனம் பயன்படுத்தி வந்ததாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதற்காக ஆவணங்களில் முறைகேடு செய்ததால் வங்கிகளுக்கு ரூ.380 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் வங்கிகள் புகார் தெரிவித்துள்ளன. இதையடுத்து, நாதெள்ளா நிறுவன உரிமையாளர்கள் குடும்பத்துக்கு சொந்தமான, அவர்களது நகைக் கடைகள் உள்ளிட்ட ரூ.113 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 அசையா சொத்துகள் அடையாளம் காணப்பட்டது. மேலும் ரூ.215 கோடி மதிப்புள்ள 25 அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு மொத்தமும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS