பெண் கொலையில் மர்மம் விலகியது... மகன் அதிரடி கைது..!


தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த கும்பாரஹள்ளியை சேர்ந்த மாதையன் மனைவி சாந்தி. மாதையன் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து தனது மகனுடன் பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீட்டின் மேல்மாடியில் வசித்து வந்தார் சாந்தி. இந்நிலையில் கடந்த மாதம் சாந்தி தனது வீட்டில், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் வீட்டில் மகன் நவீன்குமார் தலையில் பலத்த காயத்துடன் இருந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு சாந்தியின் மகன் நவீன்குமார் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது தாய் சாந்தியை கொலை செய்ததாக, மகன் நவீன்குமார் ஒப்புக்கொண்டார்.

தனது தாய் சாந்தி முறை தவறி நடப்பதாகவும், தங்களது வீட்டிற்கு வெளி ஆட்கள் அடிக்கடி வந்து சென்றதால் தாய் சாந்தியை கடந்த ஜுலை 10-ம் தேதி கண்டித்ததாகவும் நவீன் குமார் தெரிவித்தார். அப்போது  இருவருக்கும் இடையே, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் சாந்தி கிரைண்டர் கல்லை எடுத்து நவீன்குமாரை தாக்கியுள்ளார். இதில் நவீன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நவீன்குமார், தாய் சாந்தியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொம்மிடி போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர். பொம்மிடியில் தாயை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS