சங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு


சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பெண்களிடம் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை துரத்தி பிடித்தால் ரூ.50ஆயிரம் வழங்கப்படும் என அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள தெற்கு துவக்கப் பள்ளியில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீவிபத்தில் வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினங்களில் நடைபெறுவதாகவும், இந்தத் தீ விபத்திற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்றும் ஆகவே இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக சூலூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ்,  தீ வைப்பு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரூ.5 ஆயிரமும், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை துரத்தி பிடிப்பவர்களுக்கு ரூ. 50ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அப்பணம் தன்னுடைய மாத சம்பளத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS