உயிருக்கு போராடும் கல்லூரி மாணவி: உதவி செய்த வாட்ஸ்ஆப் நண்பர்கள்..!


பெரம்பலூரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, உயிருக்கு போராடும் ஏழை கல்லூரி மாணவிக்கு சமூகவலைத்தள குழு நண்பர்கள் ஒன்றிணைந்து ரூ.25,000 பண உதவி செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே இருக்கும் கூத்தனூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம்-கம்சலா தம்பதியரின் மகள் லாவண்யா. இவர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பிஏ தமிழ் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாவண்யாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக லாவண்யா சேர்க்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது லாவண்யாவின் இரண்டு சிறுநீரகமும் செயலிழிந்து போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது தந்தை சண்முகத்திடம் ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்று லாவண்யாவிற்கு பொருத்தப்பட்டது. பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த நிலையில், மூன்றாவதாக பொருத்தப்பட்ட சிறுநீரகமும் அடுத்த 7வது நாளில் செயலிழந்து போனது.

இதனையடுத்து தற்போது லாவண்யாவிற்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சை செய்து கொள்ள போதிய வசதி இல்லாமல் தவித்து வரும் லாவண்யாவின் பெற்றோர், 18 வயதே ஆன கல்லூரி மாணவி என்பதால் அவருடைய எதிர்காலம் கருதி தமிழக அரசு சிறப்பு அனுமதியளித்து உடனே சிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்வதோடு, சிகிச்சையின் முழு செலவையும் அரசே ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதனையறிந்து பெரம்பலூரில் ‘ஹேப்பி டீம் 2.0’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் வாட்ஸ்ஆப் குருப் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ரூ.25,000  நிதி திரட்டி லாவண்யாவின் வீட்டுக்கு நேரில் சென்று, பண உதவி செய்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த வாட்ஸ்ஆப் குழுவில் வெளிநாட்டில் பணியாற்றுபர்கள், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

POST COMMENTS VIEW COMMENTS