சிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து


இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்துள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 464 என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்கத்திலே இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 2 ரன்கள் எடுப்பதற்குள் ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆனார். 

தொடங்கிய வேகத்தில் 3 விக்கெட் வீழ்ந்ததால் இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டு விடும் என்றே முதலில் தெரிந்தது. ஆனால், கே.எல்.ராகுல் தனி ஆளாக தொடக்கத்தில் இருந்தே தளராமல் பவுண்டரிகளை விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டார். தனது ரன் ரேட்டை 80 என்ற அளவிலே வைத்துக் கொண்டார். அவருக்கு ரகானே சிறிது நேரம் ஒத்துழைப்பு தந்தாலும் அவரும் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். ரகானே ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 

        

அறிமுக வீரர் விஹாரியும் டக் அவுட் ஆக கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட். இந்த ஜோடி இவ்வளவு தூரம் நீடிக்கும் என்று இங்கிலாந்து அணி நினைத்திருக்காது. இருவரும் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர் என்பதோடு இருவரும் பவுண்டரிகளை விளாசி ரன்களை கிடுகிடுவென உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ராகுல் 118 பந்துகளிலே சதம் விளாசினார். அதேபோல், ரிஷப் பண்ட் 78 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 52.3 ஓவரில் 200 ரன்னும், 64.2 ஓவரில் 250 ரன்னும், 75.5 ஓவரில் 300 ரன்னும் எடுத்தது இந்திய அணி. இளம் வீரர் ரிஷப் பண்ட் 117 பந்துகளில் சதம் விளாசினார். அவர் சிக்ஸர் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 78 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 148 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இன்னும் 30 ஓவர்கள் மீதமுள்ளது. கே.எல்.ராகுல் 144, ரிஷப் பண்ட் 113 ரன்கள் எடுத்தனர். 

         

கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி இங்கிலாந்து வீரர்களை மிரட்டி விட்டது. 3வது டெஸ்ட் போட்டியில் பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி இந்திய அணிக்கு கொடுத்த நெருக்கடியைப் போல் தற்போது இந்த ஜோடி கொடுத்துள்ளது. இந்த ஜோடி 200 ரன்களுக்கு மேல் ரன் குவித்தது.

82வது ஓவரின் முதல் பந்தில் 149 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் ரஷித்  ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்டும் 114 ரன்னில் ரஷித் பந்துவீச்சில் அவுட் ஆனார். 88 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS