464 ரன்கள் இலக்கு - 2 ரன்னில் 3 விக்கெட் இழந்து இந்தியா திணறல்


இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. பட்லர் 89, குக் 71, முகமது அலி 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அறிமுக வீரர் விஹாரி 56 ரன்களும், கேப்டன் விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட், முகமது அலி தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். 

இதனையடுத்து, 40 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3வது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. குக் 18, ரூட் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

      

இதனையடுத்து நான்காவது நாளான இன்று குக், ரூட் இருவரும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். குக் நிதானமாக விளையாட ரூட் ஒருநாள் போட்டியை போல் அடித்து விளையாடினார். இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். குக் 127 பந்துகளிலும், ரூட் 81 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரது அற்புதமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் சதம் 210 பந்துகளிலும், ரூட் 151 பந்துகளிலும் சதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 321 ரன்கள் எடுத்திருந்த போது ரூட் 125 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் குக் 147 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தனர். இந்த இரண்டு விக்கெட்களையும் அறிமுக வீரர் விஹாரி கைப்பற்றினார். 

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் சரிந்தது. ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கர்ரன் 30 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 112.3 ஓவரில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, விஹாரி தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

        

இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது. தவான் ஒரு ரன்னிலும், புஜாரா, விராட் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

POST COMMENTS VIEW COMMENTS