பாகிஸ்தானில் அணைகட்ட கிரிக்கெட் நடுவர் நிதி உதவி!


பாகிஸ்தானில் நீர்தேக்கங்களை மேம்படுத்த பிரபல கிரிக்கெட் நடுவர் அலீம் தார் நிதி உதவி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். அவர் சமீபத்தில், நாட்டின் தண் ணீர் பிரச்னையை தீர்க்க நிதி உதவியை கோரியிருந்தார். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் தாரளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அணைகள் கட்டி தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து பலர் நிதி உதவி அளித்து வருகின்றனர். அதன்படி, பிரபல கிரிக்கெட் நடுவர் அலீம் தார் ரூ. 10 ஆயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ஏழு லட்சம்) உதவியாக அளிக்க முன் வந்துள்ளார். 

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘பாகிஸ்தான் அரசு எடுக்கும் இதுபோன்ற முயற்சிகளை வரவேற்கிறேன். வெளிநாட்டில் வசிக்கும் மற்ற பாகிஸ்தானியர்களும் நிதி உதவி அளிக்க முன்வரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஐசிசி நடுவர்களில் மிகவும் பிரபலமான சிலரில் அலீம் தாரும் ஒருவர். பாகிஸ்தானைச் சேர்ந்த இவர், தனது சொந்த ஊரான லாகூரில் சில மாதங்களுக்கு முன் உணவு விடுதி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து காது கேளாதோருக்கான பள்ளி ஒன்றைத் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

POST COMMENTS VIEW COMMENTS