காயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார்!


காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரில் இப்போது பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்தியாவும் வென்றுள்ளன. நான்காவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் முதுகு வலி காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. ஐபில் போட்டியின் போதே காயம் அடைந்திருந்த அவருக்கு இலங்கையில் நடந்த நிஹடாஸ் கோப்பை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து இங்கிலாந்து தொடருக்கு தேர்வு பெற்றிருந்தார். காயம் அதிகமானதால் அங்கிருந்து இந்தியா திரும்பிய அவர் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, புவனேஷ்வர்குமார்
முக்கிய பங்காற்றினார். 19 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்த முறை காயம், அவர் பங்களிப்பை தடுத்துவிட்டது. 

இப்போது அவர் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார். கடந்த 4 வாரங்களாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்திய அணியில் அவர் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனால் புவனேஷ்வர் குமார், பெங்களூரில் நடந்துவரும் இந்திய ஏ, தென்னாப்பிரிக்க ஏ, ஆஸ்திரேலிய ஏ, இந்திய பி அணிகளுக்கான ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருக்கிறார். இதில் இந்திய ஏ அணிக்காக விளையாட இருக்கும் அவர் அதில் திறமையை நிரூபித்தால் இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS