வெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்


இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றார். இதனால், ஆசியப் போட்டிகளிலும் ஹிமா தாஸ் மீது அதிக கவனம் இருந்தது. 

இந்நிலையில், ஆசியப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் பந்தைய தூரத்தை 50.79 நொடிகளில் கடந்தார். முதலிடம் பிடித்த பக்ரைன் நாட்டின் சல்வா நசீர் 50.09 நொடிகளில் கடந்தார். இதனிடையே, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அன்னாஸ் யஹியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால், இந்தியாவிற்கு மேலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS