இந்திய அணியில் இணைந்த பிருத்வி ஷா, விஹாரிக்கு கடும் பயிற்சி!


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள பிருத்வி ஷாவும் விஹாரியும் இங்கிலாந்து சென்றடைந்தனர். 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவானும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ராவும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷாப் பன்டும் களமிறக்கப்பட்டனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் விராத் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக  மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிருத்வி ஷா, காக்கிநாடாவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர். 

இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து சென்றடைந்தனர். அங்கு இந்திய வீரர்களுடன் இணைந்தனர். நேற்று அவர்கள் இந்திய வீரர்களுடன் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டனர். நான்காவது போட்டிக்காக, இன்னும் இந்திய அணி பயிற்சியை தொடங்காவிட்டாலும், இப்போது ஜிம் பயிற்சி நடந்து வருகிறது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை வலை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

(விஹாரி)

அப்போது பிருத்வி ஷாவும் விஹாரியும் அந்த பயிற்சியில் ஈடுபடுவார்கள். இருந்தாலும் ஆடும் லெவனில் இருவருக்கும் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் அப்படியே கிடைத்தாலும் யாராவது ஒருவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் கூறப் படுகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS