மயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி!


மயங்க் அகர்வாலின் அபார சதம் காரணமாக, இந்திய ’பி’ அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றி பெற்றது.

இந்திய ‘ஏ’, இந்திய ‘பி’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 49 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 

அதிகப்பட்சமாக அம்பத்தி ராயுடு 48 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 35 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்க ளில் ஆட்டமிழந்தனர். இந்தியா ‘பி’ அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஸ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் ஆடிய இந்திய ‘பி’ அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் 114 பந்துகளில் 3 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்தார். சுப்மான் கில் 42 ரன்கள் எடுத்தார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. கேப்டன் டிராவிஸ் ஹெட் அபார சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 48.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் காயா ஸோண்டா 117 ரன்களும் குளோதே 50 ரன்களும் எடுத்தனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS