இறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை 


ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் டென்னிசில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் இணை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் டென்னிஸில் இந்தியாவின் போபண்ணா - சரண் இணை, அரையிறுதியில் ஜப்பானின் ஷிம்பகுரோ - கெய்ட்டோ இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை 4-6 என இழந்த இந்திய இணை, அடுத்த 2 செட்களை 6-3, 10-8 எனக் கைப்பற்றி வெற்றியை வசமாக்கியது. 

இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் இணை குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னிஷ் குணேஸ்வரன், காலிறுதியில் தென் கொரியாவின் Kwon Soonwoo-வை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது,

POST COMMENTS VIEW COMMENTS