சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து - வெற்றிக் கனியை பறிக்குமா இந்தியா


இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.

நாட்டிங்ஹாமில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. 

நான்காவது நாளான இன்று குக் 9 ரன்களுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஜென்னிங்ஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையிலும், குக் 17 ரன்களிலும் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஜோ ரூட் 13 ரன்களிலும், போப் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியில் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்கள் சாய்த்தார். இதனால், 200 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

            

ஆனால், பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் ஆட்டத்தின் போக்கினையே மாற்றினார். மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். இதனால், 41.3 ஓவரில் 100 ரன்களையும், 55 ஓவரில் 150 ரன்களையும் இங்கிலாந்து எட்டியது. ஒரு கட்டம் வரை நிதானமாக ஒன்று இரண்டு ரன்களை மட்டும் எடுத்து வந்த இந்த ஜோடி, பின்னர் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்து விளையாடியது. பட்லர் 93 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

62 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 111 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 300 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியுள்ளது. பட்லர் 67 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்றைய நாளில் ஒரு செஷனும், நாளை ஒருநாள் முழுவதுமாகவும் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இன்றைய நாள் முடிவதற்கு இந்திய அணி விக்கெட்களை எடுத்தால்தான் நாளை நம்பிக்கையுடன் தொடங்க முடியும். வெற்றியையும் உறுதி செய்ய முடியும்.

POST COMMENTS VIEW COMMENTS