ஆண்டர்சன் வீசிய பந்து தாக்கி விக்கெட் கீப்பருக்கு எலும்பு முறிவு!


இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்தபோது விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட் டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 97, ரஹானே 81 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 161 ரன்களில் சுருண்டது. ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டை அள்ளினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. விராத் கோலி 103 ரன்கள் சேர்த்தார். புஜாரா 72 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 52 ரன்களும் எடுத்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. நான்காம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

இந்நிலையில், நேற்று 44-வது ஓவரின் போது, வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடித்தார். அப்போது வேகமாக வந்த பந்து அவரது இடதுகை நடுவிரலை பயங்கரமாகத் தாக்கியது. வலியால் தரையில் விழுந்து துடித்தார். உடனடியாக வெளியேறிய அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங்கை கவனித்தார். பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் தொடர்ந்து ஆடுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS