சிபிஎல் தொடர்: 49 பந்தில் சதமடித்து மிரட்டிய ஹெட்மையர்!


வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் சிபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் ஹெட்மையர் 49 பந்துகளில் அபார சதமடித்தார். 

ஐபிஎல் போல வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் டி20 (சிபிஎல்) தொடர் நடந்து வருகிறது. இதிலும் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகிறார். இதன் 11-வது லீக் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை லாடர்ஹில்லில் நடந்தது. இதில் ஷோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேஸான் வாரியர்ஸ் அணியும் ஆண்ட்ரூ ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற கயானா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. ஹெட்மையர் 49 பந்துகளில் 5 சிக்சர் 11 பவுண்டரிகளுடன் அபார சதம் அடித்தார். சோயிப் மாலிக் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய ஜமைக்கா அணி 16.2 ஓவர்களில் 138 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி வெற்றி பெற்றது. 

ஜமைக்கா அணியில் அதிகப்பட்சமாக பிலிப்ஸ் 29 பந்துகளில் 43 ரன்னும் ராஸ் டெய்லர் 20 பந்தில் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS