நாளை 3 வது டெஸ்ட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்!


இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நாளை தொடங்குகிறது. 

முதல் இரு டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ’இரண்டாவது டெஸ்ட் தோல்விக் கு வீரர்கள் தேர்வில் செய்த தவறுதான் காரணம்’ என்று இந்திய கேப்டன் விராத் கோலி வெளிப்படையாகக் கூறியிருந்தார். 

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமில்லாத மைதானத்தில், இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்வை சேர்த்திருக்கக் கூடாது என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதன்படியே அவரும் அந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து நாளைய போட்டியில் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட இருக்கிறார். பும்ரா உடல்நிலை தேறி விட்டதால் அவர் களமிறங்குகிறார். அவருடன் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வேகப்பந்துவீச்சை கவனித்துக்கொள்வார்கள். சுழலுக்கு அஸ்வின் இருக்கிறார். பேட்டிங்கிலும் அவர் நிதானம் காட்டுவதால் இந்திய அணி அவரை பெரிதும் நம்புகிறது.

இந்திய மண்ணில் கலக்கும்  தொடக்க ஆட்டக்காரர்கள் வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். தென்னாப்பிரிக்க தொடரிலும் இதே நிலைதான் நடந்தது. முரளி விஜய், முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் நிலைத்து நிற்கவில்லை. முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட்டில், இரண்டு இன்னிங்ஸிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றினார். ஒரே டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன் ஒருவர் டக்-அவுட் ஆவது இது 6-வது முறை! 

கே.எல்.ராகுலுக்கும் இதே சிக்கல். தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார். இதனால் நாளைய போட்டியில் கடந்த போட்டியில் உட்கார வைக்கப்பட்ட ஷிகர் தவான் அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. 

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார். முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் டக் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்தார். கீப்பிங்கிலும் நிறைய தடுமாற்றம். இதனால் நாளை தொடங்கும் போட்டியில் அவர் களமிறங்குவது டவுட். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிங்குவார் எனக் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஏ அணி சார்பில் இடம்பெற்ற ரிஷப் அதில் சிறப்பாக ஆடியதை சில முன்னாள் வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அவரை டெஸ்ட்டில் அறிமுகப்படுத்த பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் சேர்க்கப்படுவது குறித்து, ‘நாளை 11 மணிக்கு மேல்தான் தெரியும்’ என்று கூறியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. நேற்று நடந்த பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் ரிஷப். அவர் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்படுவார் என்கிறார்கள். புஜாரா, ரஹானே ஆகியோரும் கடும் பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர்.

(ரிஷப் பன்ட்)

முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த விராத் கோலி, நேற்றைய பயிற்சியில் வலியோடு ஈடுபட்டார். அவர் நூறு சதவிகிதம் குணமாகவில்லை. நாளை, அவர் உடல்நிலை சரியாகிவிடும் என அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியை எப்படியாவது வென்று விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் இந்த டெஸ்ட்டையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். இதனால் இந்த டெஸ்ட் இன்னும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
 

POST COMMENTS VIEW COMMENTS