வழக்கில் இருந்து ஸ்டோக்ஸ் விடுவிப்பு: இங்கிலாந்துக்கு சுகமான தலைவலி!


அடிதடி வழக்கில் இருந்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டது, அந்த அணிக்கு சுகமான தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அன்று இரவு நைட் கிளப் ஒன்றுக்கு சென்றார் பென் ஸ்டோக்ஸ். அங்கு ரியான் ஹாலே, ரியான் அலி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஹாலே, முன்னாள் ராணுவ வீரர். தகராறு முற்றி ஸ்டோக்ஸ் அவர்களை கடுமையாகத் தாக்கினாராம். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணை இப்போது நடந்து வந்தது. இந்த விசாரணை காரணமாக இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார் ஸ்டோக்ஸ். 

இந்நிலையில் வழக்கு விசாரணை இப்போது நேற்று முடிந்துவிட்டது. ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று அறிவித்த நீதிபதி வழக்கிலிருந்து அவரை விடுவித்தார். இந்த வழக்கில் தண்டனை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டதில், இங்கிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. இதையடுத்து இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படுகிறார். இதன் காரணமாக கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இப்போது புது தலைவலி ஏற்பட்டுள்ளது. 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸூக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் அபார சதமடித்து மிரட்டினார். இது அவருக்கு முதல் டெஸ்ட் சதம். இப்போது ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பதால், யாரை நீக்க, யாரை சேர்க்க என்பதில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். 

(கிறிஸ் வோக்ஸ்)

இதுபற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறும்போது, எல்லாருமே சிறப்பாக விளையாடுகிறார்கள். யாரை உட்கார வைப்பது என்று யோசிப்பது கஷ்டம். இது சுகமான தலைவலி’ என்று தெரிவித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS