மோசமான ரெக்கார்டை மாற்றுவாரா கோலி ..? 


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். மேலும் ஒரு இன்னிங்ஸ் 159 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸில் படுதோல்வி அடைந்தது, இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இரண்டு போட்டியிலும் முக்கிய வீரர்கள் பலரும் இங்கிலாந்து வேகபந்து வீச்சுக்கு சொற்ப ரன்களில் இரையாகினார். 

அதுமட்டுமல்லாமல் அணி தேர்விலும் தவறு செய்து விட்டதாக கேப்டன் கோலியே ஒப்புக்கொண்டார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 18 ஆம் தேதி நாட்டிங்கம்மில் தொடங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை இந்தப் போட்டி முக்கியமானது. 

இப்போட்டியில் வென்றால் இங்கிலாந்து அணி எளிதாக இத்தொடரை வென்றுவிடும். இதனால் தன் நெம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருகிறது இந்திய அணி. முதல் போட்டியில் 147 ரன்கள் எடுத்து அசத்திய கோலியும் முதுகு வலியால் அவதிபடுவது இந்திய அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் நாட்டிங்கம்மில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்திலும் இருகிறார் கேப்டன் கோலி. காரணம் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடிய போது நாட்டிங்கம் டெஸ்டில் கோலி எடுத்து 9 ரன்கள் மட்டுமே. முதல் இன்னிங்ஸில் 1, இரண்டாம் இன்னிங்ஸில் 8 மட்டுமே.ஏன் அதே போட்டியில் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி கூட ஆட்டமிழக்காமல் அரைசதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

                                   

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கோலி, இந்த மோசமான சாதனையில் இருந்து மீண்டு எந்தக் களத்திலும் என்னால் சாதிக்க முடியும் என நிரூபிக்க காத்திருக்கிறார். நாட்டிங்கம் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்க உள்ள போட்டி வேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோலிக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை உண்டாகியுள்ளது. ஆண்டர்சன் மற்றும் பிராட் வேகபந்துவீச்சில் மிரட்டி வரும் நிலையில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் இனி வரும் டெஸ்டிலாவது மீண்டு வருவார்களா என்பது இந்திய ரசிகர்களின் பெரிய ஏக்கமாக இருக்கிறது. 

POST COMMENTS VIEW COMMENTS