கேப்டனாகிறார் அஸ்வின் ? பிசிசிஐ திட்டம்


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பது சந்தேகமாக இருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கோலி பங்கேற்காத பட்சத்தில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது அணியின் துணைக் கேப்டனாக ரஹானே உள்ளார். இவர் ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தலைமை ஏற்றார். இந்நிலையில் கோலிக்கு காயம் சரியாகாத பட்சத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.

ஆனால், ரஹானேவை கேப்டனாக நியமிப்பதை பிசிசிஐ நிர்வாகம் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்தத் தொடரில் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ரஹானே ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்றுக் கூட புரியவில்லை. எனவே இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாகும் வாய்ப்பு மிகக் குறைவே. இந்நிலையில் கோலியால் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்க முடியவில்லை என்றால் இந்திய அணிக்கு ரவிசந்திரன் அஸ்வின்தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட பல அணிகளுக்கு ஏற்கெனவே கேப்டனாக இருந்தவர். எனவே, கோலி இல்லாதபட்சத்தில் அஸ்வின் இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


 

POST COMMENTS VIEW COMMENTS