ஆசிரியர் தினம்.. மனதில் பட்டதை சொல்கிறோம்.


சில நல்ல ஆசிரியர்களால்தான் அந்த சமூகத்துக்கு பெருமை கிடைக்கிறதே தவிர, ஒட்டுமொத்த ஆசிரியர்களால் அல்ல. 

வகுப்பறையில் பாடம் நடத்தாமல் டியூஷன் நடத்தி மாடி வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது, பைனான்ஸ், தண்டல் என சகல பக்கமும் பணத்தோடு கட்டிப்புரள்வது தான் பெரும் பாலான ஆசிரியர்களின் சுயசரிதையாக உள்ளது. நோட்ஸ்சில் உள்ளதை அப்படியே போர்டில் எழுதிப் போட்டு விட்டு ஜெகுஜன பத்திரிகைகளில் அழகுக் குறிப்பு, சமையல் பக்கம் என ஆழ்ந்துபோகும் ஆசிரியைகளுக்கும் பஞ்சமில்லை. இவர்களைவிட அந்த காலத்தில் இன்னொரு குரூப் உண்டு. சொந்த வெறுப்புக்காக ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் கூட இரண்டு மூன்று வருடம் குழந்தைகளை ஃபெயிலாக்கி, உன் புள்ளைக்கு படிப்பே ஏறாது மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று கிராமத்து பெற்றோரை கடுப்பேற்றி ஏராளமான பேரை பள்ளியை விட்டே நிறுத்த வைத்தவர்கள்.. 

ஒன்றாம் வகுப்பில் பாஸான குழந்தைக்கும் ஃபெயிலான குழந்தைக்கும் பெரிய அளவில் அறிவு வித்தியாசத்தை கண்டுபிடித்த அந்த கல்வி அதிமேதாவிகளுக்கு இன்றும் நம்முடைய வரிப்பணத்தில் பென்ஷன் போய்க்கொண்டிருக்கலாம். மற்ற தொழிலில் உள்ளவர்கள்மீது இப்படி கோபம் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் மாதா, பிதா, குரு, தெய்வம் என பூஜிக்க வேண்டிய முக்கிய பட்டியலில் இவர்கள் வருவதால், தான் இப்படி வேதனையை வெளிப்படுத்தவேண்டியுள்ளது.
 
ஆசிரியர் பணி என்பது தன்னலமற்ற ஒரு தவவாழ்வு. நல்ல பண்புகளை குழந்தைகள் மனதில் ஊக்குவிக்கும் பணி. சட்டையின்மேல் பட்டன்களை எப்போதும் திறந்துவிட்டு திரிந்த பள்ளிப்பருவத்தில், ஒரு ஆசிரியர் செவிலில் விட்ட அறைதான் இன்றுவரை சட்டையின் அத்தனை பட்டன்களையும் ஒழுங்காக போடவைக்கிறது. பல நெருடலான விஷயங்களையெல்லாம் மீறி, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சொல்ல அர்ப்பணிப்பு குணம் கொண்ட ஆசிரியர்கள் இன்றும் உள்ளனர் என்பதுதான் ஆறுதலான விஷயம். 50 பேர் கொண்ட என் கல்வி வரலாற்று பட்டியலில் மூன்றுபேர் மட்டுமே கற்பித்தலை சுவாசமாக கொண்ட ஆசிரியர்கள். காலில் விழுந்து மட்டுமல்ல. தினந்தோறும் பூஜிக்க தகுதி கொண்ட தெய்வங்கள். இப்படி ஏராளமானோரின் வாழ்வில் பூஜிக்கத்தக்க அளவில் போற்றப்படும் தகுதி வாய்ந்த அத்தனை ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

POST COMMENTS VIEW COMMENTS