மரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை


நியூயார்க் மருத்துவமனையில் இருந்த போது வாஜ்பாய் மரணத்தை பற்றி ஒரு கவிதை எழுதினார். அதன் வரிகள் மூலம் அவரது வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ளலாம். 

இந்தியாவின் பிரதமராக வலம் வந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். ஆனால் அவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் கவிஞர். அவருக்கு அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் அவர் கவிதைகள் எழுதினார். அவரது 51 கவிதைகளைத் தொகுத்து ‘எனது 51 கவிதைகள்’ என்று நூலாக வெளியிட்டார். ஹிந்தியில் அதற்கு ‘மேரி இக்யாவன் கவிதாயேம்’ என்று தலைப்பு. இவரது கவிதைகளை தமிழில் பத்திரிகையாளர் வாமனன் மொழிபெயர்த்திருக்கிறார்.

இதனை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல்நலம் சரியில்லாமல் நியூயார்க் மருத்துவமனையில் இருந்தபோது வாஜ்பாய் “மரணத்தோடு மோதிவிட்டேன்” என்று எழுதிய கவிதை அவரது மரணத்துடன் தொடர்புள்ளது. அந்த வரிகைகளை வாசிக்கும் போது அவர் மரணத்தை பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தார் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. 

“மரணத்தோடு மோதிவிட்டேன்”

மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம் 
ஏன் பயம் கொள்ள வேண்டும்?

மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே!
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரீட்சித்துப் பார்.

                -வாஜ்பாய்

POST COMMENTS VIEW COMMENTS