பாதையோட போச்சு, வீடு போயிருந்தா ? கேரளாவின் பரிதவிப்பு


கடும் மழையும் கரை புரண்டு ஓடும் வெள்ளமும் கேரளாவை புரட்டி போட்டிருக்கிறது. தொடரும் மழையால் பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்திருக்கிறார்கள். மலைப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் பலரது வீடுகள் எங்கே இருக்கிறது என்ற அடையாளமே இல்லை. வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டை விட்டு போன பலர், அரசு முகாம்களில் இருக்கிறார்கள். இப்போது வரை வீடு திரும்ப முடியவில்லை. 

கேரளாவில் வெள்ள பாதிப்புகளை களத்தில் இருந்து வழங்க சென்றிருந்த செய்தியாளர் சஞ்சீவி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். வேலு ஆச்சாரி என்பவர் தனது வீட்டுக்கு செல்லும் பாதையை இழந்தி நிற்கிறார். எப்படி வீட்டை அடைவது என அவருக்கு தெரியவில்லை. என்ன நடந்தது என தெரிந்து கொள்ள தொடர்பு கொண்டோம். இடுக்கி பகுதியில் வசித்து வருபவர்தான் வேலு ஆச்சாரி. நேற்று திடீரென அவரது வீடு இருந்த பகுதியில் கடும் நிலச்சரிவு, அவ்வளவுதான் வீட்டை விட்டு குடும்பத்தோடொ வெளியேறியவர் இப்போது வரை தனது வீடு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார். 

“ வீட்டுல இருந்து வெளியே ரோட்டுக்கு வர்றதுக்கு தாழ்வான பாதை இருக்கும், வீட்டுக்கு முன்னாடி இருந்த இடத்துல மிளகாய் போட்டிருந்தேன், தென்னை மரம், மா மரம்னு மரங்களும் கூட இருந்துச்சு, நிலச்சரிவுல எல்லாம் எங்க போச்சுனே தெரியல, பாருங்க பாதைய தேடிக்கிட்டு இருக்கேன்” என்றார் கண்ணீர் மல்க. சற்று மேடான பகுதியில் இருக்கும் அவரது வீட்டுக்கு செல்ல படிகள் கட்டப்பட்டு பாதை இருந்தது. ஆனால் நிலச்சரிவால் எல்லாம் போய்விட, எப்படி மேலே செல்வது என தெரியாமல் தவித்து வருகிறார். மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டால் எங்கே வீடும் போய்விடுவோமோ என்ற பதைபதைப்பு அவரது முகத்தில் தெரிகிறது. வேலு ஆச்சாரியின் வீடு அருகே ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

POST COMMENTS VIEW COMMENTS