உதித்து வருவார் உதய சூரியனாக..!


சுறுசுறுப்பாய் இயங்கியபோதும் சரி, இயங்க முடியாமல் இருக்கையில் அமர்ந்த பிறகும் சரி, பரபரப்புகளுக்கு துளியும் பஞ்சமில்லாதவர் திமுக தலைவர் கருணாநிதி.

தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதி ஆதரவு அரசியல், கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற அளவில்தான் அரைநூற்றாண்டு கால தன் அரசியல் வாழ்வை வைத்திருந்தார் அவர். அவரது உடல்நிலை குறித்து எத்தனையோ ஆண்டுகளாக பரவிய வதந்திகள் எல்லாம் எப்படி பொய்த்துப்போனதோ அதேபோல, இப்போதும் அப்படியே ஆகிவிடவேண்டும் என்பதுதான் அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, முதன்முறையாக கருணாநிதிக்கு ‘ட்ரக்யாஸ்டமி’குழாய் பொறுத்தப்பட்ட பிறகுதான், அவரது உடல்நிலை குறித்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கு வீரியம் கூடியது. இருப்பினும், கருணாநிதியின் பிறந்தநாளான கடந்த ஜூன் 3ஆம் தேதி கோபாலபுரம் வீட்டில் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கை அசைத்து, தன்னை சுற்றிக்கிடந்த வதந்திகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை தன் ‘வில்’ பவரால் விரட்டியடித்தார் அவர்.

அதன்பிறகு, கடந்த 24ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். 26ஆம் தேதி கருணாநிதிக்கு  உடல் நலிவுற்றிருப்பதாக திமுக தலைமைக் கழகத்தில் இருந்து அறிக்கை வெளியாக, அது திமுக தொண்டர்களை பதைபதைப்புக்கு உள்ளாக்கியது. பின்னர், கோபாலபுர வாசல் வழி மேல் விழி வைத்து தொண்டர்கள் காத்திருக்க, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரும் தங்கள் வீடுகளுக்கு கிளம்ப, கருணாநிதிக்கு ஒன்றுமில்லை என தொண்டர்கள் பெருமூச்சுவிட,  நேற்றைய நள்ளிரவில் மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைய, முதன்முறையாக அவர் மருத்துவ ஆம்புலன்சில் காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்டெக்சரில் அவரைத் தூக்கி வைத்து வெளியே கொண்டு வரும்போது அவர் தோளில் போடப்பட்டிருந்த மஞ்சள்துண்டையும், அவரது கருப்பு கண்ணாடியையும் கண்ட உடன்பிறப்புகள் உடைந்தே போய்விட்டனர். மு.க.ஸ்டாலினால் கூட பொங்கி வந்த அழுகையை அடக்க முடியவில்லை. இப்போது, காவிரி மருத்துவமனையில் இருந்து வரத் தொடங்கியிருக்கும் மருத்துவ அறிக்கைகள் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றன. இதனால், காவிரி மருத்துவமனையை சுற்றிலும் திரண்டிருக்கும் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி, வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இது சாதாரண ஆள் அடிச்ச அடி இல்ல; டாக்டர்களே நீங்க அடிச்சுபோட்ட ஆளுங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கத் தெரியாம திகைச்சுபோய் நிக்கிறாங்க… என்று பாஷா திரைப்படத்தில் ரஜினியை பார்த்து சொல்வதைபோல, கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நேற்று திகைத்துபோய் நின்றார்கள். ஏனென்றால் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் 120/20 என்ற அபாயகட்டத்தை எட்டியிருந்த நிலையில் அதை சீராக்க அதிக சக்திக்கொண்ட மருத்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தது.

உடல்ரீதியாக வலுவாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற மருந்தை செலுத்தினால் கூட அவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பாத ரத்த அழுத்தம், கருணாநிதிக்கு மருத்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் இயல்புநிலைக்கு திரும்பியது. இதனை கண்டு மருத்துவர்கள் வியந்துப் போயினர்.  நினைவு இருந்தாலும், இல்லை என்றாலும் எதையும் துணிந்து எதிர்க்கும் வல்லமையை இயல்பிலேயே கொண்ட கருணாநிதி, இப்போது மரணத்தை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்.

“எழுந்து வா தலைவா! எழுந்து வா” என்று காவிரி மருத்துவமனையை சுற்றி கூடியிருக்கும் தொண்டர்கள் எழுப்பும் முழக்கம் அவரது செவி மடல்களை எட்டுமளவிற்கு மருத்துவமனையின் சன்னல்களை சற்று திறந்து வைத்தாலே போதும் அவர் மீண்டும் உதித்து வருவார் “உதய சூரியனாக”!

POST COMMENTS VIEW COMMENTS