சிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..!


எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டியை முதல்முறையாக  தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர். 

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலமாக சலவை தொழிலாளர்கள் இனி கரிப்பெட்டியில் இருந்து விடுபட்டு, குறைந்த செலவில் இந்தச் சலவை பெட்டியை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்து உள்ளனர். 

முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை சலவை தொழிலாளிகள் கரியை,  சலவை பெட்டிகளில் அடைத்து அதன் மூலமாக சூட்டை ஏற்படுத்தியே சலவை தொழிலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகளை சலவை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக, கார்பன்டை ஆக்சைட் அதிக அளவில் வெளியேறுவதால் அதனை நாம் சுவாசிக்கும் போது உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அதில் இருந்து விடுபடும் வகையில் இந்தச் சலவை பெட்டியை உருவாக்கி உள்ளனர்.

5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் மூலமாக சலவை பெட்டியை எளிதில் பயன்படுத்த முடியும். மற்ற சலவை பெட்டியின் விலையிலே இந்தச் சலவை பெட்டியும் கிடைக்கும். இதன் விலை 6500 ரூபாய். எந்த வித எரிவாயு சிலிண்டர் மூலமாகவும் இதனை பயன்படுத்தலாம்.

மேலும் வீட்டில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரில் இணைத்தும் இதனை  பயன்படுத்த முடியும். மின்சார கட்டணத்தை விட இரு மடங்கு குறைந்த அளவிலான செலவே இதற்கு ஆவதாக கூறுகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா மட்டுமே இதில் செலவாவதாக தெரிவிக்கின்றனர். மேலும் கரி கிடைப்பதில் அதிகளவு சிரமத்தை சந்திப்பதால் இந்தப் பெட்டி மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.  இரண்டு நிமிடங்களில் இந்தச் சலவை பெட்டி சூடாகி விடும். யார் வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்தச் சலவை பெட்டி அமைந்து உள்ளதால், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS