தங்கத்தில் ஆடைகளை செய்து அசத்தும் கோவை நபர் 


தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களில் பல்வேறு வடிவங்களான ஆடைகளை தயாரித்து அசத்தி வருகிறார் கோவையில் வசித்து வரும் நபர். சிறிய தொழில்முனைவோராக இருந்தாலும், விதவிதமான டிசைன்களில் பெரிய நிறுவனங்களுக்கு நிகராக நெய்யப்படும் ஆடைகளினால் பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறார். 

கோவை துடியலூர் அடுத்த தொப்பம்பட்டி பிரிவில் குடும்பத்துடன் வசித்து வரும் ராதாகிருஷ்ணன், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களில் ஆடைகளை நெய்யும் சொந்த தொழிலில் கடந்த 2ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

ஆண்கள் பயன்படுத்தும், கோட், தலைப்பா, கைக்குட்டை, மணிபர்ஸ், பிறந்த குழந்தைகளுக்கு சட்டை, இறைவனுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் என தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களை நமது தலைமுடியை விட மெல்லியதான சுமார் 0.06 மில்லி மீட்டர் அளவிலான இழைகளை கொண்டு நூல் போன்ற அமைப்பை உருவாக்கி வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும் ஆடைகளை தயாரித்து வருகிறார்.

தனி நபர், மொத்த வியாபாரி என பலதரப்பட்ட மக்களுக்கு நெய்து தரப்படும் இந்த ஆடைகளை செய்வதற்கு தேவையான உலோகத்தை வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கொடுத்து விடுவதாக கூறும் ராதாகிருஷ்ணன், அந்த ஆடைகளுக்கு அரசின் முத்திரையான ஹால்மார்க், முறையான எடை ரசீது என அனைத்தும் அரசின் வழிகாட்டுதலோடு விற்பனை செய்யப்படும் பொருட்களுடன் இணைத்து வழங்கப்படுவதாக கூறுகிறார். மேலும், எதிர்காலத்தில் இந்த ஆடைகளை உருக்கி அவரவர் விருப்பத்திற்கேற்ப பணமாகவும், வேறு அணிகலன்களாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யப்படுவதாக கூறும் இவர், பாரம்பரிய தங்க பட்டறை தொழில் பின்னணியில் வந்திருந்தாலும், மற்றவர்களில் இருந்து மாறுபட்டவையாக இருக்க வேண்டும் என்பதால் இந்தப் புதுமையான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்.  

தானே இயந்திரங்கள் உருவாக்கி புதிய தொழில்நுட்பம் மூலம் பணியாட்களே இல்லாமல் ராதாகிருஷ்ணன் ஒருவராக செய்து வரும் இந்தத் தொழிலுக்கு, அவரது மனைவி, மகன், மகள் என குடும்பத்தினர் அனைத்து வகையிலும் உதவி செய்து வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS