விளம்பரதாரர்களின் தகவல்களை வெளிப்படையாக்கியது பேஸ்புக் !


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கருத்துத் திணிப்புகளை உருவாக்குகின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக முன்வைக்கப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனால்டிகா போன்ற அமைப்புகள் இது போன்ற கருத்துருவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தன. இது வெளியே தெரிந்த பின்னர், பேஸ்புக்கின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் மூடப்பட்டது. இழந்த மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறும் விதமாக தனது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது பேஸ்புக், அதன் முக்கிய நடவடிக்கையாக விளம்பரங்களை அளிப்பவர்கள் தொடர்பான விவரங்களை அது வெளிப்படையாக்கி உள்ளது.

இதன்மூலம் முகநூலின் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தை எந்த நிறுவனம், தளம் அல்லது முகநூல் பக்கம் வெளியிடுகிறது என்று அறியலாம். பேஸ்புக் தவிர அதன் பிற நிறுவனங்களான மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றிலும் இந்த மாற்றம் அமலாக்கப்பட்டு உள்ளது. முகநூல் பக்கத்தில் உள்ள விளம்பரங்கள் குறித்த தகவல்களை அறிய ‘இன்ஃபோ அண்டு ஆட்ஸ்’ என்ற பட்டியைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதைக்குப் பயன்பாட்டில் உள்ள விளம்பரங்களைப் பற்றி அறிய ‘ஆக்டிவ் ஆட்ஸ்’ என்ற பட்டியைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் விளம்பரம் எதையும் வெளியிடாத முகநூல் பக்கங்களில் கூட அவை உருவாக்கப்பட்ட நாள், பெயர்மாற்றம் போன்ற நடவடிக்கைகள் வெளிப்படையாக்கப்பட்டு உள்ளன. பேஸ்புக் விளம்பரங்களில் ஏதாவது தவறு இருந்தாலோ, அல்லது அந்த விளம்பரங்கள் பேஸ்புக் விதிமுறைகளை மீறுவதாகக் கருதினாலோ பயனாளர்கள் முகநூலுக்கு புகார் தெரிவிக்கலாம். பேஸ்புக் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. செரில் சென்பெர்க் இந்த மாற்றம் குறித்து தனது அதிகாரப்பூர்வ பதிவில், ‘இது எங்களையும் விளம்பரதாரர்களையும் பொறுப்புணர்வுடன் இருக்கச் செய்யும். இன்னும் பல வசதிகளை பயனர்களுக்கு வரும் வாரங்களில் தருவோம்’ – என்று கூறி உள்ளார்.

பேஸ்புக்கின் இந்தப் புதிய முயற்சிகள் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்குமா? அல்லது அதன் விளம்பரங்கள் குறையுமா? – என்பதை இனிவரும் காலங்களில் பார்க்கலாம்.

POST COMMENTS VIEW COMMENTS