காணாமல் போகும் மொழிகள்.. காக்க வேண்டிய தருணம்..


உலகம் முழுக்க பல்வேறு மக்களால் பேசப்பட்டு வந்த பல்வேறு மொழிகள் இப்போது இல்லை. சில மொழிகளை பேசுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. ஒரே ஒரு நபர் மட்டும் பேசும் மொழி கூட பெரு நாட்டில் உள்ளது. அவர் இறந்துவிட்டால் அந்த மொழியும் இறந்து விடும். மக்கள் தொகை மட்டும் அதிகரித்து வருகிறது ஆனால் அவர்கள் பேசி வரும் மொழிகள் அழிந்து வருகின்றன அல்லது அழிக்கப்பட்டு விட்டன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் 1961 கணக்கெடுப்பு நடத்திய போது 1652 மொழிகள் 1652 மொழிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அரசு அங்கீகரித்திருக்கும் மொழிகள் வெறும் 122 ; அதாவது 10 ஆயிரம் பேர் பேசும் மொழிகளை மட்டுமே இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக அரசு ஏற்கிறது. 10 ஆயிரம் பேருக்கும் குறைவாக பேசும் மொழிகள் என இந்தியாவில் ஏறக்குறைய 600 மொழிகள் இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பேசும் மொழிகள் குறையக் காரணம் என்ன என ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் மொழிகளை கொண்ட பன்முகத் தன்மையை எப்போதும் கொண்டதாக இருந்த சூழலில், பெரிய மொழிகளாக வளர்பவை தங்களை சார்ந்து இயங்கிய மொழிகளை அழித்து விட்டன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதோடு தற்கால வளர்ச்சிக்கேற்ப மொழிகளை கொண்டு செல்லும் வழக்கம் குறைவதால் மொழிகள் எளிதில் அழிவைச் சந்திக்கின்றன. 

டிஜிட்டல் உலகமான இன்று மின்னணு முறைக்கும் மொழிகளை மாற்றுவதும் , அதன் பயனாளர்களை ஈடுபடுத்துவதும் அவசியம். ஆனால் மிகக் குறைந்த மொழிகளே அதை நோக்கி தங்களை செலுத்துகின்றன. மற்றவை அழிந்து போகின்றன. மத்திய மொழி ஆராய்ச்சி மையம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, அது முழுமையான பலனை தரவில்லை என்கிறது ஆய்வு. அதே நேரத்தில் சில மொழிகளை பேசுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. மொழி அழிந்து விடுமோ என்ற பயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதற்கான காரணமாக இருக்கின்றன. 

மொழிகளை காக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது. ஏனெனில் அழிந்து போன மொழியை மீட்டெடுக்க முடியாது என்பதாலே இந்த கோரிக்கை வலுவாக வைக்கப்படுகிறது. அரசு நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகளையும் இதில் ஈடுபடுத்தலாம். சி.எஸ்.ஆர் என்று சொல்லக்கூடிய நிதியை மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்த உத்தரவிடலாம். ஏனெனில் இந்தியாவில் ஒரு மொழி அழிந்தால், ஒரு இனம் அழியும். பாரம்பரியம் அழியும். பெருமை அழியும். ஏனெனில் இந்தியா மொழிகளால் வளரும் நாடு.

நன்றி : எகனாமிக் டைம்ஸ்

POST COMMENTS VIEW COMMENTS