உஷார் ! நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் !


இப்போதெல்லாம் தியேட்டர் முதல் டிவி சீரியல்கள் வரை புகைப்பிடிக்கும் காட்சிகள் வந்தால் அரசின் உத்தரவுப்படி "புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்" என்ற வாசகங்கள் தவறாமல் இடம் பிடிக்கிறது. மேலும், நம் நாட்டில் விற்கப்படும் சிகரெட்டு பாக்கெட் அட்டைகளில் 85 சதவிதம் வரை சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் புகைப்படத்துடன்தான் விற்கப்படுகிறது. புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவே ஒவ்வெரு பட்ஜெட்டிலும் புகையில் பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படுகிறது. இதனால், இந்தியாவில் வி்ற்கப்படும் சிகரெட்டுகளின் குறைந்தப்பட்ச விலை இப்போது ரூ.5 அதிகபட்சமாக ரூ.16 வரை விற்கப்படுகிறது.

ஆனால் அண்மை காலமாக இந்திய சட்டத்திட்டத்தை பின்பற்றாமல், எந்தவொரு எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் வெளிநாட்டு சிகரெட்டுகள் அதிகளவில் விற்கப்படுகின்றது. இது மலிவாகவும் இருப்பதால் புகைப்பவர்கள் மத்தியில் இதற்கு ஏகோபித்த ஆதரவும் இருக்கிறது. இப்போது கடைகளில் அனுமதியின்றி விற்கப்படும் சிகரெட்டுகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்படுகிறது. இதனை தடுக்கும் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் சுகாதாரத்துறைக்கே இருக்கிறது. ஆனால், இவை யாவும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படுவதில்லை. 'யூரோமானிட்டர்' எனும் தொண்டு அமைப்பின் ஆய்வின்படி, சட்டத்துக்கு புறம்பாக கடத்தி வரப்படும் சிகரெட்டுகளின் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வியாபாரம் மொத்த சிகரெட்டு விற்பனையில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மிகப்பெரிய சந்தை !

உலக அளவில் சட்டத்துக்கு புறம்பான சிகரெட்டு விற்பனையில் இந்தியா 5-ஆவது மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடத்தல் சிகரெட்டுகள் அமோகமாக  விற்பனையாகிறது. இவற்றின் மீது எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவது இல்லை. மேலும், சுங்கம், கலால், வாட் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட முடியாததால் மிக கவர்ச்சிகரமான மற்றும் குறைந்த விலையில் தமிழகத்தில் கடத்தல் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுவும், சென்னை, கோவை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இந்தச் சிகரெட்டுகளை புகைப்பதற்கான மோகம் அதிகரித்து வருகிறது.

கடத்தல் எப்படி நடக்கிறது ? 

வெளிநாட்டு சிகரெட்டுகள் சென்னை, தூத்துக்குடி துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. இங்கிருந்து பெரும் விற்பனையாளர்கள் மூலமாக சிறு சிறு கடைகளுக்கு செல்கிறது. இந்தச் சிகரெட்டுகள் விற்பனையில் லாபம் அதிகமென்பதால் வியாபாரிகளும் இதனை வாங்க தொடங்கியுள்ளார்கள். மேலும், பல வியாபாரிகளுக்கு இவை சட்டத்துக்கு புறம்பாக இறக்குமதி செய்யப்படும்  சிகரெட்டுகள் என தெரிவதில்லை. கடத்தி வரப்படும் வெளிநாட்டு சிகரெட்டு பெட்டிகளில் இந்திய சட்டப்படி எந்த ஒரு எச்சரிக்கை படமும், வாசகங்களும் இடம் பெறுவதில்லை. சில வெளிநாட்டு சிகரெட்டு பெட்டிகளில் மிகச் சிறிய அளவிலும், வெளிநாட்டு மொழிகளிலும் எச்சரிக்கை வாசகங்களை காண முடிகிறது. நம் நாட்டின் சட்டப்படி சிகரெட் பெட்டிகளில் 85 சதவீத அளவில் எச்சரிக்கை படம் ஒவ்வொரு புகையிலை பொருள்களின் பாக்கெட்டிலும் இடம்பெற வேண்டும்.

பெரிய லாபம் 

இறக்குமதி அல்லது கடத்தப்படும் புகையிலை பொருள்களின் பெட்டிகளில் எம்.ஆர்.பி. மற்றும் தயாரிப்பு தேதியும் இல்லை. இதன் காரணமாக, வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். உதாரணத்துக்கு வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டின் விலை ரூ.30 என்றால் அதில், ரூ.8 லாபம் கிடைக்கிறது. ஆனால் நம் நாட்டு சிகரெட்டு பெட்டிகளில் மிக குறைந்த லாபமே கிடைக்கின்றது. உதாரணத்துக்கு 10 சிகரெட்டுகள் கொண்ட பெட்டி ரூ.150 என்றால் கடைக்காரருக்கு ரூ.10 மட்டுமே லாபமாக கிடைக்கிறது. மேலும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் வரத்து மிக அதிக அளவில் வருவதற்கு  உள்நாட்டு சிகரெட்டுகளின் மேல் விதிக்கப்படும் அதிக அளவிலான வரி விதிப்பே காரணமாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உள்நாட்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருள்கள் மீதான சட்ட விதிகளும் முக்கிய காரணம் என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS