பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூபிற்கு நோட்டீஸ்


புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை வழங்க மறுப்பது தொடர்பாக விளக்கமளிக்க பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளைத் தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடந்தபோது, இணையதள குற்றங்களை விசாரிக்கும்போது சமூக வலைதளங்கள் முழு ஒத்துழைப்பு தருவதில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்களை விசாரிப்பதற்கு காவல்துறை கேட்கும் விவரங்களை சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என 2011-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள் வழிவகுக்கிறது என்றார். மேலும், அவ்வாறு விவரங்களை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கும் விதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

அதேபோல, சமூக வலைதளங்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதற்கு குறைதீர்ப்பாளரை அந்தந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதுபோன்று நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை என்பதையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் நிறுவனங்களை இந்த வழக்குடன் இணைத்தும், நோட்டீஸ் அனுப்பவும் உத்தவிட்டனர். மேலும் குறைதீர்ப்பாளர்களை நியமிக்காதது மற்றும் இந்தியாவில் அலுவலகங்கள் அமைக்காதது பற்றியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS