ஃபேஸ்புக்கில் இனி ஷேர் ஆப்ஷன் கிடையாதா..?


நியூஸ் ஃபீடில் வரும் போஸ்டுகளில் ஷேர் ஆப்ஷனுக்கு பதிலாக மெசேஜ் ஆப்ஷன் கொண்டுவர ஃபேஸ்புக் சோதனை முயற்சி மேற்கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் மனநிலையை அறிந்து ஃபேஸ்புக்கும் அவ்வப்போது அடிக்கடி அப்பேட் செய்து வருகிறது. இதன்மூலம் மக்களை அதிகம் கவரவும் நினைக்கிறது. தற்போது ஃபேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஷேர் ஆப்ஷன். நியூஸ் ஃபீடில் மற்றவர்கள் பதிவிட்டுள்ள போஸ்டுகளில் ஷேர் ஆப்சன் என்கிற வசதி இருக்கும். அவர்கள் பகிர்ந்துள்ள விஷயம் நமக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் ஷேர் ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதும். அந்த விஷயம் நமது டைம் லைனுக்கும் வந்துவிடும். இந்நிலையில் நியூஸ் ஃபீடில் வரும் போஸ்டுகளில் ஷேர் ஆப்ஷனுக்கு பதிலாக மெசேஜ் ஆப்ஷன் கொண்டுவர ஃபேஸ்புக் சோதனை முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஏனென்றால் ஒரே விஷயத்தை பலரும் ஷேர் செய்வதால் தெரிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பழைய விஷயங்களும் ஷேர் செய்யப்படுகின்றன. எதிர்மறையான கருத்துகளும் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால் ஒரு சில ஃபேஸ்புக் பயனாளர்கள் எரிச்சல் அடைவதாகவும் கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே ஷேர் ஆப்ஷன் வசதியை மெசேஜ் ஆப்ஷன் வசதியாக மாற்ற ஃபேஸ்புக் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது சோதனை முயற்சியாகவே இதனை ஃபேஸ்புக் மேற்கொண்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS