பூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..!


வானியல் சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் மொத்தமாக இரண்டு அற்புதங்கள் நடைபெற உள்ளன.

வானியல் சார்ந்த நிகழ்வுகளில் சூரிய கிரகணம் என்பதோ, சந்திர கிரகணம் என்பதோ அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரு முறையோ நிகழக் கூடியதுதான். அதுபோன்ற நாட்களில் தொலைநோக்கி கருவி அமைக்கப்பட்டு அதன்மூலம் கிரகணங்களை காண வசதியும் செய்யப்படுவதுண்டு. ஆனால் இந்த முறை அப்படியல்ல. வரும் ஜூலை 27-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இதனை காணமுடியும். சிறப்பு என்னவென்றால், இந்த நூற்றாண்டின் அரிய மிக நீண்ட சந்திர கிரகணமாக இது கருதப்படுகிறது.

இந்த சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் மற்றொரு வானியல் அற்புதம் நடைபெற  உள்ளது. சூரியனில் இருந்து 4-வது இடத்தில் இருக்கும் கோளானது செவ்வாய் கோளாகும். இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி, செவ்வாய் கோளானது பூமிக்கு அருகில் அதாவது 57.6 மில்லியன் கி.மீ தொலைவிற்கு வரஉள்ளது.

ஏற்கெனவே கடந்த 2003-ஆம் ஆண்டு இதற்கு முன்னதாக செவ்வாய் கோள் பூமிக்கு அருகில், அதவாது  55.7 மில்லியன் கி.மீ தொலைவில் வந்திருந்தது. இதுவே கடந்த 60,000 ஆண்டுகளில் செவ்வாய் ஆனது பூமிக்கு மிக அருகில் வந்த சம்பவமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் செவ்வாய் கோளானது பூமியை நெருங்க உள்ளது.  அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் (ஜூலை 31) தேதி செவ்வாய் கோளானது வெளிச்சத்துடன், கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அன்றை தின சூரிய மறைவிற்கு பின்னரும் அதற்கு அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன்னரும் இதனை காணலாம் என கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் வானியல் அறிவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS