“15 ஆயிரத்தில் ஒரு செயற்கைக்கோள் செய்தோம்” - சென்னை இளைஞர்கள் சாதனை


சென்னைக்கு புதிய முகவரியை கொடுத்திருக்கிறார்கள் நான்கு இளைஞர்கள். இவர்கள் 33 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை கண்டறிந்து விண்ணில் ஏவ இருக்கிறார்கள். ‘ஏரோஸ்பேஸ்’ பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருக்கும் ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத் மற்றும் சுதிதான் அந்தச் சாதனை இளைஞர்கள். உலகம் வியக்கும் இந்த உழைப்புக்கு பின்னால் ஒளிந்துள்ள தகவல்கள் என்ன? புதிய தலைமுறை இணையதளம் சார்பாக ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். 

இந்தச் செயற்கைக்கோளை எப்படி உருவாக்கினீர்கள் ?

“க்யூப் இன் ஸ்பேஸ் (cube in space) போட்டியில் பங்கேற்பதற்காக நாங்கள் இந்தச் செயற்கைக்கோளை எனது நண்பர்கள் மூவரும் சேர்த்து உருவாக்கினோம். இந்தப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக 1000திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் 100 விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டது. அதில் நாங்களும் ஒருவர். அந்த 100ல் ஒன்றுதான் இந்த Expiremental செயற்கைக்கோள்.” 

இந்தச் செயற்கைக்கோளின் சிறப்பு என்ன ?

“இந்தச் செயற்கைக்கோள் 3டி பிரிண்டெட் நைலானை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோள் இதுதான். இதன் எடை 33 கிராம். இதற்கு முன்னால் 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை இதே போட்டியில் நம் தமிழக மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இதன் அயுள்காலம் 24 மணி நேரம்தான். இந்தச் செயற்கைக்கோளை போர்டு சென்சார் பயன்படுத்தி வானிலை, பருவநிலை மாற்றம், நைலானின் பண்புகள் உள்ளிட்ட 20 வகையான பாரா மீட்டர்ஸ் அறிய செய்யலாம். மேலும் இதனை SD card module மூலமாக ரெக்கார்ட் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளலாம்.”

செயற்கைக்கோளை உருவாக்க எவ்வளவு நாள் ஆனது? 

“இந்தச் செயற்கைக்கோளை உருவாக்க நாங்கள் 30 முதல் 40 நாட்கள் வரை எடுத்து கொண்டு உருவாக்கினோம். இது மிகக் குறைந்த எடை என்பதால் FEMTO டைப் செயற்கைக்கோள் எனப்படும். இது Sub Orbital ரக செயற்கைக்கோள் ஆகும். இது 70 KM தூரம் வரை செல்லும்.”

இதற்கு எவ்வளவு செலவு ?  

“இந்தச் செயற்கைக் கோள் உருவாக்க வெறும் 15 ஆயிரம்தான் செலவு செய்தோம். ஆன செலவை 4 பேரும் சேர்ந்து பங்கீட்டு கொண்டோம். மேலும் இந்தச் செயற்கைக்கோளை நாசா மற்றும் ஐடூடுல் சேர்ந்து பலூன் (Highpressure) மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. இதன் மூலம் துள்ளியமான பருவநிலை மாற்றங்களையும் அதிக மழை பொழிய உள்ள இடங்களையும் கண்டறியலாம்.” என்கிறார் ஹரிகிருஷ்ணன். 

POST COMMENTS VIEW COMMENTS