நீங்கள் எப்போது இறப்பீர்கள்? - துல்லியமாக கணிக்கும் கூகுள் !


மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எப்போது இறப்பார்கள் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் உருவாக்கியுள்ளது.  

கூகுள் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. கூகுளில் அத்தனை தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஜிமெயில், மேப் என தன்னுடைய தொழில்நுட்பத்தால் கோடிக் கணக்கானவர்களை கூகுள் கட்டிப்போட்டுள்ளது. 117 கோடி வாடிக்கையாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு உள்ளார். 

பல்வேறு தகவல்களை அளிக்கும் கூகுள், இப்படி ஒரு தகவலையும் அளிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கூகுள் நிறுவனத்தின் மருத்துவ அறிவுக் குழு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கு எவ்வளவு சாத்தியம் உள்ளது என்பதை கணிக்க செயற்கை நுண்ணறிவு கணித செயல்முறையை உருவாக்கியுள்ளது.

                    

கூகுள் உருவாக்கியுள்ள அந்த டூல் மூலமாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்க முடியும், திரும்பவும் நோயாளி எப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார், எவ்வளவு நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க முடியும் என்பது போன்ற தகவல்களை கணிக்க முடியும். 

இதற்காக கூகுள் நிறுவனம் என்ன செய்துள்ளது என்றால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்து அனைத்து தகவல்களை அந்த டூலில் பதிவு செய்து கொள்கிறது. தனிப்பட்ட ஒரு நபர் இதுபோல் அவரது முழு மருத்துவ குறிப்புகளை, தகவல்களை தொகுத்து வைத்துக் கொள்வது சிரமம். ஆனால், அந்த வேலையை கூகுள் செய்கிறது. சேகரித்து வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு நோயாளி இறப்பை மருத்துவர்களை விட கூகுள் துல்லியமாக கணிக்கிறது.

இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் மரணத்தை எப்படி முன் கூட்டியே கூகுள் கணிக்கிறது என்பது குறித்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி நேச்சுரல் என்ற இதழ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியில் முதல் மருத்துவமனையில் 95 சதவீதமும், இரண்டாவது மருத்துவமனையில் 93 சதவீதமும் கூகுள் சரியாக இறப்பை கணிப்பதாக கூறப்பட்டுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட ஆய்வில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இறப்பதற்கு 9.3 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை கணித்தது. ஆனால், கூகுள் டூலானது அந்தப் பெண் இறப்பது 19.9 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணித்தது. மருத்துவமனையில் அந்தப் பெண் குறித்து உள்ள 1,75,639 தகவல்களின் அடிப்படையில் இதனை கூகுள் கணித்தது. அந்தப் பெண் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறந்துவிட்டார். 

அதேபோல், நோயின் அறிகுறிகள், நோய் உருவாதல் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளவும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது.   

POST COMMENTS VIEW COMMENTS