ஸ்மார்ட் போனுக்கு அடிமையானவரா நீங்கள்..? முதல்ல இத படியுங்கள் !


ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு காலத்தில் மொபைல் போன் வைத்திருப்பதே அரிதான ஒன்றாக இருந்தது. லேன்ட் லைன் போனை நம்பித்தான் எல்லோரும் இருந்தார்கள். அப்பொழுது மெல்ல மெல்ல ஒரு ரூபாய் காயின் போன் பிரபலம் ஆனது. காலம் கொஞ்சம் மாற, செல்போன்கள் பரவலாக எல்லோர் கைகளையும் ஆட்கொண்டது. குறைவான விலைகளில் போன்கள் கிடைக்கத் தொடங்கியன. 

தற்போதைய நிலையில், ஸ்மார்ட் போன்களே இளைஞர்கள் உட்பட பெரும்பாலானோர் கைகளை ஆக்கிரமித்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் இளைஞர்கள் தங்களையும் மறந்து மூழ்கிவிடுகிறார்கள். நீயில்லாமல் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன் என்று காதலி/காதலன்களுக்கு சொல்லிக் கொள்வது, தற்போது ஸ்மார்ட் போனுக்கு பொருந்தும். ஸ்மார்ட் போன் சிறிது நேரம் இல்லாவிட்டால் இளைஞர்களுக்கு ஏதோ போலாகிவிடுகிறது. இதற்கு இளைஞர்கள் மட்டும் அடிக்ட் ஆகியிருந்த காலம் போயி, தற்போது பல்வேறு வயதினரும் ஸ்மார்ட் போன்களில் மெய்மறந்து காலம் கழிக்கிறார்கள். ஸ்மார்ட் போன்கள் நிறைய நேரங்களில் சரியாக பயன்பட்டாலும், தவறான விஷயங்களுக்கும் காரணமாக உள்ளதை செய்திகளில் பார்க்க முடிகிறது. 

         

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நியூரோ ரெகுலேசன் என்ற பத்திரிகை ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது போதைப் பொருள் பயன்படுத்துவது போல தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பொருட்களைப் போல் டிஜிட்டலுக்கு அடிமையாவதால் தனிமையுணர்ச்சி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். 

          

இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் எரிக் பெபர், “போதைப் பொருள் பழக்கத்தைப் போல் ஸ்மார்ட் போனுக்கு அடிக்ட் ஆவது மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது” என்கிறார். ‘சமுதாயத்தில் ஒருவருடன் ஒருவர் நேருக்குநேர்  பேசுவது என்பது போய், தற்போது சமூக வலைத்தளங்களில் மட்டுமே உரையாடுவது தனிமையுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூக வலைத்தளங்களில் மூழ்கியே இருப்பது சமுதாய உறவுகளில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது’என்றும் கூறுகிறார்கள். 135 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. படிக்கும் போது, சாப்பிடும் போது, வகுப்பறையின் போது என எல்லா நேரங்களிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை கூடவே செய்கிறார்கள் மாணவர்கள். அதனால், மாணவர்களுக்கு கவனக்குறைவு அதிகரிக்கிறது. புரிந்துக் கொள்ளும் திறனும் குறைகிறது. 

         

மொபைல் போன் பயன்படுத்தும் போது இடையிடையே புஷ் நோட்டிஃபிகேஷன், வைபரேசன் மற்றும் சில அலார்ட் பயன்பாடுகள் நம்மை கட்டாயப்படுத்தி அதில் ஈடுபட வைக்கிறது. இவைதான் மூளை நரம்பு பாதிப்புக்கு வழிவகை செய்துவிடுகிறது. அதனால் புஷ் நோட்டிஃபிகேசன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்கிறனர் ஆய்வாளர்கள். 

அதேபோல், ‘டிஜிட்டல் உலகிற்கு மாணவர்கள் அடிக்ட் ஆவது அவர்கள் தவறு அல்ல. கார்பரேட்டுகளின் லாபத்திற்காக அதிவேகமாக ஊக்குவிக்கப்படும் டெக்னாலஜி வளர்ச்சியின் விளைவு இது’ என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

POST COMMENTS VIEW COMMENTS